சென்னை புளியந்தோப்பு திருவிக நகர் மசூதி தெருவில் வசித்தவர் துக்காராம் இவரது மனைவி தாராபாய் . துக்காராம் போரூரில் ஒரு செருப்பு தயாரிக்கும் கடையில் வேலை செய்து வந்தார். மனைவி தாராபாய் வில்லிவாக்கத்தில் ஒரு காய்கறி கடையில் வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். துக்காராம், தாராபாய் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் தாராபாயின் நடத்தையில் துக்காராமுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டைப்போட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மனைவி மீதான சந்தேகம் அதிகரித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகாரித்து அக்கம் பக்கத்தினர், மகன்கள் அவர்களை சமாதானப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு மேல் துக்காராமுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. பின்னர் ஒருவாறாக சமாதானம் ஆகிய நிலையில் மனைவி தூங்கியுள்ளார். அப்போது ஆத்திரம் அடங்காத துக்காராம் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார்.

ரத்த வெள்ளத்தில் மனைவி உயிரிழந்ததும், துக்காராம் போலீஸார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று எண்ணி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதை அறியாத மகன்கள் மூவரும் தூங்கியுள்ளனர்..

காலையில் எழுந்துப்பார்த்தபோது தாய் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகவும், தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகவும் கிடந்ததைப்பார்த்த மகன்கள் அதிர்ச்சியடைந்து அழுதுள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக புளியந்தோப்பு போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.