சென்னை அருகே உள்ள குன்றத்தூரில் வாடகை கேட்ட உரிமையாளரை ஓட ஓட விரட்டி இளைஞர் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை குன்றத்தூரில் குணசேகரன் என்பவர் வீட்டில் அஜித் என்பவர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். அவர் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கடந்த 4 மாதங்களாக வாடகை  செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து உரிமையாளர் குணசேகரன் அஜித்திடம் வாடகை கேட்டு அவ்வப்போது தொந்தரவு செய்து கொண்டிருந்தார். இன்று காலை அவர் அஜித்திடம் வாடகை கேட்டதாகவும் வாடகை கொடுக்க முடியாவிட்டால் காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அஜித் அரிவாளை எடுத்து வீட்டு உரிமையாளரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டு உரிமையாளர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.