சென்னையில் ஓட்டல் முதலாளியின் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த ஊழியர்கள், அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் காமராஜர் சாலையை சேர்ந்தவர் தேவதாஸ். அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி மனோனன்மணி (எ) விஜயலட்சுமி. தேவதாஸ் நடத்தி வரும் ஓட்டலில் இளையராஜா, சீனிவாசன் உள்பட சிலர் வேலை செய்கின்றனர். இதில் மேற்கண்ட 2 பேரும் சரிவர வேலை செய்யவில்லை. அவர்களின் நடவடிக்கையும் சரியாக இல்லை. இதனால் அதிருப்தியடைந்த தேவதாஸ், 2 பேரையும் வேலையை விட்டு அனுப்பினார். 

இந்நிலையில், நேற்று இரவு தேவதாஸ் ஓட்டலில் வியாபாரம் முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் விஜயலட்சுமி, கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது விஜயலட்சுமி அணிந்திருந்த 15 சவரன் நகை, பீரோவில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. 

தொடர்ந்து போலீசாரின் விசாரணையில், ஓட்டல் வேலையில் இருந்து நீக்கப்பட்ட சீனிவாசன், இளையராஜா ஆகியோர் கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அதே நேரத்தில் அவர்களும் தலைமறைவாகிவிட்டனர். இதையொட்டி போலீசார், 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.