மருமகளிடம் தகராறு செய்த மகனை தந்தை குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

குன்றத்தூர் அடுத்த திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாண்டியன் (69). இவரது மகன் நாகராஜ் (28). இவர், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த சில நாட்களாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தினமும் வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 25-ம் தேதி இரவு வழக்கம்போல், குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாகராஜ், தனது மனைவி தீபாவிடம் தகராறில் ஈடுபட்டார். 

இதனை அவரது தந்தை பாண்டியன் தட்டிக் கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இருவரும் கைகளால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில், ஆத்திரமடைந்த தந்தை பாண்டியன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மகன் நாகராஜ் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நகராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பெற்ற மகனை கொலை செய்த குற்றத்திற்காக, தந்தையை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பெற்ற மகனை தந்தை குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.