சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி என என கூறிய, காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட டுபாக்கூர் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி என என கூறிய, காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட டுபாக்கூர் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சென்னை அபிராமபுரம் கேசவ பெருமாள்புரம் சென்ட்ரல் அவென்யூவை சேர்ந்தவர் ஜீனத்பேகம் (35). தற்போது சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று அங்கேயே வசிக்கிறார். இவரது கணவர் முகமது பாரூக்.கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 

முகமது பாரூக்கின் வீடு அபிராமபுரத்தில் உள்ளது. இந்த வீட்டின் கீழ் தளத்தில் ஜீனத் பேகம் வசித்து வந்தார். மேல் தளத்தில் கணவரின் சகோதரர் ராஜா முகமது வசிக்கிறார். இதனால் கீழ்த்தள வீடு முகமது பாரூக்குக்கு சொந்தமானது. கணவன் இல்லாததால் ஜீனத் பேகம் சிங்கப்பூரிலேயே தங்கினார். ஜீனத்பேகம், சென்னை வந்தால் மட்டும் கணவருக்கு சொந்தமான வீட்டில் தங்குவார். ராஜா முகமதுவுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி மேல் வீட்டில் வசிக்கிறார். இரண்டாவது மனைவி சஹானாவை ஜீனத் பேகம் வீட்டில் தங்க வைத்துள்ளார். 

கடந்த 25ம்தேதி ஜீனத்பேகம் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தார். இங்கு தனது வீட்டில் தங்கியுள்ளார். அப்போது சில நாட்கள், நான் இங்கு தங்குவதால் ராஜா முகமதுவின் 2வது மனைவி சஹானாவிடம் வீட்டை காலி செய்யும் படி கூறியுள்ளார். அதற்கு சஹானா, இது எனது கணவரின் வீடு, நான் காலி செய்ய முடியாது என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ஜீனத்பேகம், அபிராமபுரம் போலீசி புகார் அளித்தார். போலீசார் ஜீனத் பேகத்திற்கு சிஎஸ்ஆர் அளித்து இருவரிடமும் சமரசம் பேசி அனுப்பினர். 

இந்நிலையில், நேற்று மதியம் மீண்டும் ஜீனத் பேகத்திற்கும் சஹானாவிற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜீனத்பேகம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அபிராமபுரம் பெண் காவலர் சிவகாமசுந்தரி சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது அங்கு TN- 12 U 9229 என்ற காரில் சுழல் விளக்குடன் ஒருவர் வந்தார். பெண் காவலரை பார்த்து, நான் ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி, சஹானாவுக்கு ஆதரவாக பேசினார். பின்னா, ‘நான் காவல் நிலையம் வந்து பேசுகிறேன் என்று கூறி மிரட்டல் தோணியில் பேசியுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி என கூறியதால் பெண் காவலர் சிவகாம சுந்தரி மரியாதை நிமித்தமாக அவருக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு காவல் நிலையம் சென்றார். அங்கு, இன்ஸ்பெக்டர் அஜய்குமாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்தார். அந்த நேரத்தில், சஹானாவை அழைத்துக்கொண்டு ஐபிஎஸ் அதிகாரி தனது சுழல் விளக்கு காரில் அபிராமபுரம் காவல் நிலையம் வந்தார். அங்கிருந்த காவலர்கள், உயர் அதிகாரிதான் வருகிறார்கள் என நினைத்து சல்யூட் அடித்தனர். 

உடனே, அவர் இன்ஸ்பெக்டரிடம் சென்று, நான் ஐபிஎஸ் அதிகாரி, தற்போது இன்டர்போல் துணை கமிஷனராக இருக்கிறேன். கூடுதல் டிஜிபி மஞ்சுநாதா எனக்கு வேண்டியவர், அவருடன் நான் வேலை பார்த்து இருக்கிறேன் எனக்கூறி மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். அதை கேட்ட இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியடைந்து, தனது இருக்கையில் அவரை அமர வைத்துள்ளார். பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார். இதனால், சந்தேகமடைந்த உடனே இன்ஸ்பெக்டர் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சனனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு உதவி கமிஷனர், ஐபிஎஸ் அதிகாரியிடம் விசாரித்தபோது, அவர் டுபாக்கூர் ஐபிஎஸ் அதிகாரி என்று தெரிந்தது. அப்போது, மேற்கு மாம்பலம் குப்பையா தெருவை சேர்ந்த சிவநேசன் (25) என தெரிந்தது.

மேலும் விசரணையில, மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து விட்டு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் கிரிமினாலஜி படித்துள்ளார். பல இடங்களில் ஐபிஎஸ் அதிகாரி போல் நடித்து பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் இருந்த காரை சோதனையிட்டனர். காரின் பின் இருக்கையில் 6 பாக்கெட் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலி ஐபிஎஸ் அதிகாரி சிவநேசன் மீது அரசு பதவியை தவறாக பயன்படுத்தியது, அரசு அதிகாரியை வேலை செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது உட்பட 5க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து சுழல் விளக்கு ஒன்று, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார், 6 கஞ்சா பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.