சென்னை கமிஷனர் ராஜேந்திரன், சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாஜி கமிஷனர் ஜார்ஜ், மாஜி அமைச்சர் ரமணா என்று முக்கிய தலைகளை சோழிகளாக்கி உருட்டி ஆடும் இந்த விவகாரம் இப்போது அங்கே தொட்டு இங்கே தொட்டு பரப்பன அக்ரஹரா புகழ் சசிகலா வரை நீண்டுவிட்டதுதான் அம்மாடியோவ்! விஷயம். 

குட்கா ஊழலிலில் சசிகலாவுக்கு தொடர்பிருக்கிறது! என்று சொல்லி இப்போது மீடியாக்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தன் பங்குக்கு போலீஸ் டிப்பார்மெண்டினுள் பட்டாசு கொளுத்திப் போட்டிருக்கிறார் மாஜி ஜார்ஜ். குட்கா விவகாரத்தில் உழல் நடந்துள்ளது! ஆனால் அதில் நான் பயனடையவில்லை!  என் பெயரை பயன்படுத்தி சிலர் ஆதாயம் தேடிக் கொண்டுவிட்டார்கள்! என்று அவர் கொடுத்திருக்கும் வாக்குமூலம் தெறிக்க விடுகிறது தமிழகத்தை. 

குறிப்பாக அப்போது துணை கமிஷனராகவும், இப்போது விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாகவும் இருக்கும் ஜெயக்குமார் மீதுதான் ஏகப்பட்ட புகார்களை வாசித்துக் கொட்டியிருக்கிறார் ஜார்ஜ். ‘நான் பல காவல்துறை அதிகாரிகளை குற்றம் சாட்டவில்லை. துணை கமிஷனர் ஜெயக்குமாரைத்தான் குறிப்பிடுகிறேன். ஒரு பிரச்னையை விசாரித்தால், அவருக்கு மேல் உள்ள கூடுதல் அணையரிடம் அறிக்கை அளித்திருக்க வேண்டும் அவர். ஆனால் ஜெயக்குமார் இதை செய்யவில்லை! என்று ஊசி இறக்கியிருக்கிறார் ஜார்ஜ். 

இதற்கு பதில் சொல்லியிருக்கும் விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமார் “ஜார்ஜ் இப்போது பணியில் இல்லை. ரிட்டயர்டு ஆகிவிட்டார். அதனால் தன் இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நான் அப்படியில்லை, பணியிலிருக்கிறேன்.  ஆனால் ஒன்று ஜார்ஜ் சென்னை கமிஷனராக இருந்த போது மூன்று நான்கு வருடங்களாக அவருடன் நாயாக உழைத்தேன். அதற்கான பரிசை கொடுத்திருக்கிறார். என்னை பற்றி சென்னை சிட்டிக்கு தெரியும், நான் யாரிடமும் கை நீட்டியதில்லை.” என்று நான்கு வார்த்தையில் ஜார்ஜுக்கு நாக் - அவுட் கொடுத்திருக்கிறார். 

தன் விளக்கம் தருகிறேன் பேர்வழி! என்று ஜார்ஜ் கொடுத்திருக்கும் பேட்டி புதிது புதிதாக பல புகைச்சல் குழிகளை வெட்டிவிட்டு, குட்கா விவகாரத்தை மேலும் விஸ்வரூபமாக்கியுள்ளது என்பது உண்மை. மேலும் அவரது பேட்டி மூலம் சென்னையில் பணியிலிருந்த பல காவல்துறை அதிகாரிகளுக்குள் இப்போது உரசல்கள் வெடித்துள்ளதோடு, குழப்பங்களும் அதிகரித்துள்ளன என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இதனால் ஒரு அதிகாரியை பழிவாங்கிட மற்றொரு அதிகாரியென ஆளாளுக்கு பல லஞ்ச விவகாரங்களை அள்ளி வெளியில் வீச ஆரம்பித்துவிடுவார்களோ!...என்கிற பதற்றம் அந்த துறையில் உருவாகியுள்ளது.