கொடநாடு கொள்ளை, அதுசம்பந்தமாக அடுத்தடுத்து நடந்த கொலைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டி ஆவணப்படம் ஒன்றை தெகல்ஹா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் நேற்று வெளியிட்டார். அதில் கொள்ளையில் சம்பந்தப்பட்ட சயன், மனோஜ் ஆகியோர் பேட்டியளித்திருந்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.\

இதையடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்தத் தகவல் உண்மைக்கு மாறானது என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த செய்தியை வெளியிட்டவர்கள் மீதும், பின்புலமாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கொடநாடு ஆவணப் படம் வெளியிட்ட மேத்யூ சாமுவேல் மற்றும் அதில் பேட்டியளித்த சயன், மனோஜ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.