சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட 4 பேர் ஏற்கனவே காசி மீது புகார் அளித்திருந்த மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

காசியின் பெயரைத் தமிழகத்தில் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. நாகர்கோவிலைச் சேர்ந்த காசி சமூக வலைத்தளங்கள் வழியாகப் பெண்களைத் தொடர்பு கொண்டு நட்பாகப் பழகி அவர்களைக் காதலிப்பதாகக் கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்கள் காசி மீது முழு நம்பிக்கை வைத்த பின்னர், அவர்களோடு தனிமையிலிருந்து அதை அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். காதலன் என நம்பி பழகிய பெண்களுக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

சம்பந்தப்பட்ட பெண்கள் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல், தனது ஆசைக்கு இணங்காத பெண்களின் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி அதிர்ச்சி கொடுத்தார். காசியின் அராஜகம் தொடர்ந்து வந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், நாகர்கோவில் போலீசார் அவரை கைது செய்தனர். காசி மீது மேலும் பல வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காசியின் மீது புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். சிபிசிஐடி போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ள இந்த புகாரின் அடிப்படையில் காசியின் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து புகார் தொடர்பாகக் காசியிடம் விசாரணை நடத்த டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளார்கள். சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட 4 பேர் ஏற்கனவே காசி மீது புகார் அளித்திருந்த நிலையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.