சென்னையில் தீபாவளி பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அதிமுக பிரமுகர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம், ராஜமங்கலம் 7-வது தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (58), ஐசிஎப் எலக்ட்ரீஷியன். அங்குள்ள அண்ணா தொழிற்சங்க பொருளாளராகவும், ஐசிஎப் கூட்டுறவு சங்க இயக்குனராகவும் இருந்தார். இவருக்கு மனைவி சசிகலா, தினேஷ்குமார், நந்தகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு நண்பருடன் கொளத்தூர் ஜிகேஎம் காலனி 31வது தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது அங்கே வந்த மர்ம கும்பல் 3 பேர் ஜானகிராமன் இருசக்கல வாகனம் மீது மோதினர். 

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்ததும் ஜானகிராமனை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பல் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஜானகிராமன், வில்லிவாக்கத்தில் உள்ள இளங்காளியம்மன் கோயிலில் செயலாளராக பணியாற்றினார். கோயிலில் 3 ஊழியர்கள் சரிவர வேலை செய்யவில்லை என்று கூறி அவர்களை ஜானகிராமன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், ஜானகிராமனை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.