சென்னையில் பட்டப்பகலில் 2 இளைஞர்கள் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தலைநகரம் சென்னை என்று அழைப்பதைவிட கொலைநகரம் சென்னை என்றே அழைக்கலாம். அந்த அளவிற்கு கொலை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சென்னை மேற்கு தாம்பரம் அருகே உள்ள அற்புதம் நகரை சேர்ந்தவர்கள் பிரதீப், சுரேஷ். இன்று காலை இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மர்ம கும்பல் ஒன்று இருவரையும் திடீரென வழிமறித்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து, அந்த கும்பலிடம் தப்பிக்க இருசக்கர வாகனத்தை அங்கேயே போடட்டுவிட்டு பிரதீப், சுரேஷ் ஆகியோர் ஓட்டம் பிடித்தனர். ஆனால், அந்த கும்பல் 2 பேரையும் விடாமல் துரத்திச்சென்று சரமாரியான கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது.

  

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட 2 பேரும் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிரதீப், சுரேஷ் இருவரையும் அவர்களது ஏரியாவிலேயே வைத்தே கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் இடுப்பில் பெரிய பட்டாக்கத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.