மாங்காடு அருகே வாலிபர் ஒருவர் மரம் நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மாங்காடு அடுத்த கோவூர், அனு கார்டன் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (28). அதே பகுதியில் பெயின்டர் வேலை செய்து வந்தார். மேலும், முறையாக பைனான்ஸ் கட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலையும் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியில் சென்ற இவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  

இந்நிலையில், கோவூர், ஈஸ்வரன் நகர் பகுதியில் நேற்று காலை யுவராஜ் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் யுவராஜ் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். 

இதுதொடர்பாக அவருக்கும், அவரது மனைவியின் உறவினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அவரது மனைவியின் உறவினர்கள் யுவராஜை கொலை செய்தனரா அல்லது பைனான்ஸ் கட்டாத வாகனங்களை யுவராஜ் பறிமுதல் செய்தபோது, ஆத்திரமடைந்த வாகன உரிமையாளர்கள் யாரேனும் அவரை கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட இடத்தில் காலி மது பாட்டில்கள் கிடந்ததால், இரவு மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல், மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். சமையல் தொழில் செய்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ். இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்றிரவு இருவரும் சேர்ந்து மதுஅருந்தினர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த லோகேஷ், நண்பன் மோகனின் கால் நரம்பை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.