புழல் சிறையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த காவலர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டைச் சேர்ந்த இன்பரசு என்பவர் புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை பணிக்குச் செல்ல அவரது இருசக்கர வாகனத்தில் புழலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது பழைய சீவரம் பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இன்பரசுவை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது. 

அவ்வழியே சென்ற நபர்கள் ரத்த வெள்ளத்தில் ஒருவர் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இன்பரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்பரசு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது  வேறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பட்டப்பகலில்  ஆயுதப்படை காவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.