அதிமுக பிரமுகரை பட்டப்பகலில் கூலிப்படை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தலையை வெட்டி சாலையோரமாக வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு அடுத்த செல்வி நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (45) இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். பொன்விளைந்த களத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் விஜயகுமார் 2012ல் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 வருடங்களாக சென்னையில் தலைமறைவாக இருந்து வந்தார். 2 மாதம் முன்பு அதிமுகவில் இணைந்து பொன்விளைந்த களத்தூர் செல்வி நகர் பகுதி நிர்வாகியாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அவரது நண்பர் சக்கரவர்த்தி என்பவர் செல்வி நகரில் கட்டியுள்ள வீட்டை பார்க்க சேகர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். சக்கரவர்த்தி, சேகர் வீட்டின் அருகே பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது 4  இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், சேகரை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சேகர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சேகரின் தலையை துண்டாக வெட்டி எடுத்த கொலையாளிகள் சாலையோரமாக வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சேகர் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக 6 பேர் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2012ம் ஆண்டு பொன்விளைந்த களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில்  சேகர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக 9 ஆண்டுகள் காத்திருந்த விஜயகுமாரின் தம்பி சுரேஷ் கூலி படையை வைத்து சேகரை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அண்ணனை கொலை செய்தவர்களை பழிவாங்க தம்பி சுரேஷ் இதுவரை 4 கொலைகளை அரங்கேற்றியுள்ளார்.