சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்ஐக்கள் போலீசார் என 5 பேர் பாதுகாப்பு காரணமாக மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றபட்டுள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டம். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ்  மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு விசாரணை கைதிகளாக கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு தந்தையும்  மகனும் அடுத்தடுத்த நாள் மரணம் அடைந்த சம்பவம் உலகயே உலுக்கியது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தயாராக இருந்தது.ஆனால் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிசிஐடி போலீசார் வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்ட முதல் நாளே கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ் பாலகிருஷ்ணன்  காவலர் மகாராஜன் என 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக சிபிசிஐடி போலீசாரால் அறிவிக்கப்பட்டு இருந்த காவலர் முத்துராஜ் தூத்துக்குடியில் உள்ள அரசன்குளத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.மருத்துவ பரிசோதனைக்குப் பின் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட முத்துராஜ் வரும் 17-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர், 2 எஸ்.ஐ.க்கள், 2 காவலர்கள் பேரூரணி சிறையில் இருந்து பாதுகாப்பு காரணமாக மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.