போலீஸ் வேலையில் சேர, தேர்வு எழுத வந்த செயின் பறிப்புக்கொள்ளையனை போலீசார் லபக்கென அமுக்கிய கைது செய்துள்ளனர். மதுரையில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சுவாரஸ்மாக பேசப்பட்டு வருகிறது. 

மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியைச்சேர்ந்தவர் விஜய் என்கின்ற விஜயகாந்த், இவர் மதுரையில் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதை தொழிலாக வைத்திருந்தார்.  பல்வேறு இடங்களில் கைவரிசைகாட்டி வந்த விஜய்யை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில்,  சிக்காமல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்தார். இதுநாள் வரை போலீஸ் கண்ணில் படாமல்  தலைமறைவாக இருந்த விஜய் ஒரு கட்டத்தில் தாமே போலீஸ் ஆகிவிட்டால்  தொல்லை இருக்காது, தொழிலுக்கும் இடையூறு இருக்காது என்று முடிவு செய்தார். 

பின்னர்,  மதுரையில் நடந்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுத தேர்வு மையத்திற்கு வந்தார் விஜய். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்ந போலீசார்  தேடப்படும் குற்றவாளியான விஜய் என்கின்ற விஐய்காந்த் நல்லவனைப்போல் தேர்வு மையத்தில் அமர்ந்து தேர்வு எழுதிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் தேர்வு எழுதி முடிக்கும் வரை அமைதியாக காத்திருந்த  போலீசார் தேர்வு எழுதி முடித்தவுடன் சுற்றி வளைத்து விஜய்யை கோழி அமுக்குவதுபோல்  அமுக்கி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மீது நிலுவையில் இருந்த செயின் பறிப்பு சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்து விஜயகாந்தை போலீசார் சிறையில் அடைத்தனர்.