டிடிவி. தினகரன் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண்ணிடம், ஹெல்மெட் கொள்ளையர்கள் 5 சவரன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திருவான்மியூரில் டிடிவி. தினகரனின் அமமுக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிர்வாக ஊழியராக சீனிவாசன் மனைவி பிரியதர்ஷினி பணியாற்றி வருகிறார். இவர் திங்கள் கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் காரில் தரமணி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒரு ஒட்டலுக்கு சாப்பிடச் சென்றனர். அங்கு சாப்பிட்டுவிட்டு அந்த ஓட்டல் அருகே நிறுத்தியிருந்த காரில் ஏறுவதற்கு பிரியதர்ஷினி நடந்து சென்றார். 

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பிரியதர்ஷினி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு சென்றனர். இது தொடர்பாக தரமணி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதில் நாங்கள் ஓட்டலுக்கு வெளியே நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். நான் வெளியே வந்த போது, திடீரென ஓடிவந்த அவர் எனது கழுத்தில் இருந்த 5 சவரன் செயினைப் பறித்துக் கொண்டு ஓடினார். அவரைத் தடுக்க முயற்சித்தேன். ஆனால் தப்பித்து சென்றுவிட்டார். எனது கணவரும், அங்கு நின்று கொண்டிருந்த நபர்களும் திருடனை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் தெருவில் முனையில் காத்திருந்த இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நண்பர்களுடன் தப்பிச் சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் காயமடைந்த பிரியதர்ஷினிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.