சென்னையில் திருட்டு பைக்கில் சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் பிரசன்னா லிப்சா. தேனாம்பேட்டையைச் சேர்ந்த இவர் கடந்த 12-ம் தேதி தனது தோழி ஒருவருடன் ஜி.என்.செட்டி சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். வலது கையில் செல்போனை வைத்துக் கொண்டு தோழியுடன் பேசிக்கொண்ட நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் லிப்சாவின் செல்போனை பறித்து சென்றனர். இதனையடுத்து, செல்போனை பறிக்கொடுத்த அந்த பெண் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அந்த இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து ஆராய்ந்த போது, அது திருட்டு வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், சூளைமேட்டைச் சேர்ந்த டாட்டூ வரைகலைஞன் ராஜூ என்பதும், அந்தப் பெண் கரூரைச் சேர்ந்த சுவாதி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சுவாதி, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சைதாப்பேட்டையில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு தங்கிருந்த ராஜூ, சுவேதா ஆகிய காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.  

கைது செய்யப்பட்ட ராஜூ மீது ஏற்கனவே வடபழனி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வாங்கவும், மாமல்லபுரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு ஜோடியாக சென்று வருவதற்காகவும் அவர்கள் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதை போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.