கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக நோய்த்தொற்று இல்லாத பகுதிகளில் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

40 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை மீண்டும் திறக்கப்பட இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து கடைகளிலும் இரண்டு காவலர்கள், ஊர்காவலர்படை வீரர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் பாதுகாப்பிற்கு பணியமர்த்தப்பட வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டதில் பொது இடங்களில் மது அருந்துபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளார் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி டாஸ்மாக் கடைகள் அருகிலோ அல்லது பிற பொது இடங்களிலோ மது அருந்த கூடாது என காவல்துறை அறிவித்துள்ளது. மீறுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதியப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எந்த வயசுக்காரங்க எப்போ டாஸ்மாக் வரணும்..? கூட்டத்தை தவிர்க்க அரசு அறிவித்த அசத்தல் திட்டம்..!

டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக வயது அடிப்படையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. நோய் தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது எனவும், கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்கப்படும் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. அதன்படி தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் தலைநகர் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 711 இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மதுக்கடைகள் திறப்பது கொரோனா வைரஸ் பரவுதலை மேலும் அதிகரிக்கும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.