காரைக்குடி அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 12 போ் மீது போலீஸார்    வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.இதனால் அப்பகுதியில் இந்த மோதல் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 காரைக்குடி  சாக்கோட்டை அருகே சின்னவேங்காவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு  இவா் சாக்கோட்டையில் கார் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு விடும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் சாக்கோட்டை சொர்ணத்தாய் அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த அருண் செல்போன் மூலம் தொடா்புகொண்டு, வாடகைக்கு கார் கேட்டதாகவும், அதற்கு பிரபு, பொது முடக்கத்தைக் காரணம் கூறி மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அருண், பிரபுவின் கார் மீது கல் வீசியதில் அதன் முன்புறக் கண்ணாடி நொறுங்கியது. இதனைப் பார்த்த அருகிலிருந்தவா்கள் பிரபுவுக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து பிரபு சிலரை சோ்த்துக் கொண்டு அருண் வீட்டிற்குச் சென்று அவரைத் தாக்கினார்.

 அப்போது தடுக்க முயன்ற அருணின் தாய் வள்ளியும் தாக்கப்பட்டார்.இதனால் ஆத்திரமடைந்த அருணும், அவரது நண்பா்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு சாக்கோட்டையில் நிறுத்தி வைத்திருந்த பிரபுவின் இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்ததில் அது எரிந்து நாசமானது.இதுகுறித்து இரு தரப்பினரும் சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதில் பிரபு அளித்த 2 புகார்களின் பேரில் அருண் மீது ஒரு வழக்கும், இருசக்கர வாகனத்தை எரித்ததில் அருண் மற்றும் அவரது நண்பா்கள் 5 போ் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இன்னொரு தரப்பில் அருண் மற்றும் அவரது தாயார் தாக்கப்பட்ட வழக்கில் பிரபு மற்றும் 5 போ் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.