சேலம் மாவட்டம் மணியனூர் பகுதியை சேர்ந்தவர் இளமாறன். இவரது மனைவி யசோதா. இருவரும் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இந்த தம்பதியினருக்கு அபிஷேக் மாறன்(29), அபிநயா என்று இரட்டை குழந்தைகள் இருந்துள்ளனர். அபிஷேக் மாறனுக்கு சொந்தமாக இருந்த மூன்று கார்களையும் நெத்திமேடு பகுதியில் இருக்கும் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து அங்கேயே ஓட்டுனராக பணியாற்றி வந்தார். அபிஷேக் மாறனுக்கு ஜெபினா என்கிற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் அபிஷேகம் தனது பாட்டி மற்றும் தங்கையுடன் அவர் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக வீட்டு மொட்டை மாடியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அபிஷேக் மாறன் பிணமாக கிடந்தார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டியும் தங்கையும் கதறி துடித்தனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க, விரைந்து வந்த காவலர்கள் அபிஷேக் மாறனின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். கொலை வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணையை தொடங்கினர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அபிஷேக் மாறனுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பல பெண்களுடன் கள்ள உறவு இருந்தது தெரியவந்தது. கார் ஓட்டி சம்பாதிக்கும் பணம் முழுவதையும் பெண்களுக்காகவே அபிஷேக் மாறன் செலவிட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் அபிஷேக் மாறன் ஓட்டுநராக பணியாற்றும் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிரபாகரனின்(28) மனைவியுடனும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பிரபாகரனை காவலர்கள் விசாரித்தனர். அப்போது தனது மனைவிக்கு தொந்தரவு கொடுத்து வந்ததால் தனது நண்பர் அருள்குமார்(23) என்பவருடன் சேர்ந்து அபிஷேக் மாறனை கொலை செய்ததை பிரபாகரன் கூறியிருக்கிறார். பிரபாகரனின் மனைவியுடன் நட்பாக பழகி வந்த அபிஷேக் அதன்பிறகு அவரை தகாத உறவுக்கு அழைத்து உள்ளார். அதுகுறித்து பிரபாகரனிடம் அவரது மனைவி கூறவே ஆத்திரமடைந்த அவர் தனது நண்பருடன் சேர்ந்து அபிஷேக்கை கொலை செய்திருக்கிறார். இதையடுத்து பிரபாகரன், அருள் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.