திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருக்கும் தச்சன்குறிச்சி வனப்பகுதியில் கார் ஒன்று எரிந்து கிடந்தது. காரின் உள்ளே சடலம் ஒன்று முற்றிலும் எரிந்து நிலையில் இருந்தது. அந்த பகுதியாக சென்றவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் எரிந்து கிடந்த காரில் இருப்பது யார் என்பதை அறிய விசாரணையை தொடங்கினர்.

காருடன் சேர்ந்து நம்பர் பிளேட்டும் எரிந்திருந்ததால் என்ஜின் எண்ணை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் திருச்சி மாவட்டம் காட்டூரைச் சேர்ந்த ஜாகிர் உசேன்(51) என்பவருக்கு சொந்தமான கார் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரது முகவரியில் தொடர்பு கொண்டு காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது ஜாகிர் உசேன் வீட்டிற்கு வரவில்லை என்று அவரது மகன் அன்சார் உசேன் கூறியிருக்கிறார்.

இதையடுத்து அன்சார் உசேனை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து காவலர்கள் விசாரணை செய்தனர். அதில் காருக்குள் எரிந்து நிலையில் இருப்பது ஜாகிர் உசேன் தான் என்பதும், கார் அவருக்கு சொந்தமானது தான் என்றும் அன்சார் உசேன் அடையாளம் காட்டினார். இதையடுத்து ஜாகிர் உசேன் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல தொழிலதிபரான ஜாகிர் உசேன் கார்களை வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வந்திருக்கிறார். இதனால் தொழில் போட்டி காரணமாக அவர் கொலைசெய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கும் டெங்கு மரணங்கள்..! அரசு மருத்துவரே பலியான பரிதாபம்..!