சென்னை அண்ணாநகரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்ணாநகரில் இதுபோன்று அடுத்தடுத்து 3 கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

அண்ணாநகர், எல்.பிளாக், 1-வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் பெரம்பூரில் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் வைத்துள்ளார். இவர்கள் திருமண நிகழ்ச்சிக்காக ஆந்திரா சென்றிருந்தனர். இந்நிலையில் வழக்கம் போல காலை வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் கேட் கதவை திறந்து உள்ளே சென்றனர்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வீட்டின் உரிமையாளருக்கும், அண்ணாநகர் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினார்.  

அப்போது பீரோவில் இருந்த 100 சரவன் நகை, ரொக்கப்பணம் மற்றும் உயர் ரக கைக்கடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியுள்ளனர். மற்றொரு லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம், நகை தப்பியது. கடந்த சில தினங்களாகவே அண்ணா நகர் பகுதி தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளியூர் செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர்.