தூத்துகுடி மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே தனியார் பேருந்தில் படிகட்டில் நின்று பயணம் மேற்கொண்ட இளைஞர், திடீரென வலிப்பு வந்து கீழே விழுந்து உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துகுடி மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே தனியார் பேருந்தில் படிகட்டில் நின்று பயணம் மேற்கொண்ட இளைஞர், திடீரென வலிப்பு வந்து கீழே விழுந்து உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழுகாசலபுரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் முருகன். இவர் வெளி ஊருக்கு சென்று கிடைக்கும் கூலி வேலை செய்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு வலிப்பு நோய் பாதிப்பு இருப்பதாக சொல்லபடுகிறது. இந்நிலையில் நேற்று காலை புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார். பேருந்து காலியாக இருந்தபோதும் உள்ளே செல்லாமல் படியில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். மேலும் படிக்கட்டில் கம்பியை பிடிக்காமல் எந்த பிடிமானமும் இல்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளார். பேருந்து நடத்துனர் பலமுறை சொல்லியும் கேட்காமல் படியில் நின்று வந்ததாக தெரிகிறது. 

இதற்கிடையே பேருந்து சில்லாநத்தம் என்ற கிராமத்தை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது படியில் நின்று பயணம் செய்த முருகனுக்கு திடீரென உடலில் அசெளகரியம் ஏற்பட்டு, வலிப்பு வரவே, கண்ணிமைக்கும் நொடியில் அப்படியே படிக்கட்டில் இருந்து உருண்டு சாலையோரத்தில் விழுந்ததாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இதை பார்த்து பதறிப்போன பயணிகள் பேருந்தை உடனடியாக நிறுத்துமாறு கூச்சலிட்டனர். படியில் தொங்கிக் கொண்டு வந்த நபர் தவறி விழுந்துவிட்டதாக கூறினர்

இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த ஆம்புலன்ஸ் முருகனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முதல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் முருகன் உயிரிழந்தார். இதையடுத்து முருகனின் தம்பி வீரசெல்வம், புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது முருகன் படியில் பயணம் செய்தது, காற்றின் வேகத்தில் தூக்கம் வந்ததுபோல் தவறி விழுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.