சென்னை பெரம்பூரில் நேற்று இரவு தனது வீட்டின் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு உள்ளிட்ட 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 

சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வந்தார். இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி ஊழியர்கள் போல சீருடையில் வந்த கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் ஆம்ஸ்ட்ராங்கை சுத்துப்போட்டு சரமாரியாக வெட்டியது. இதனை தடுக்க வந்த அவரது நண்பர்கள் 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 

இதையும் படிங்க: Bikeல் வந்த மரம் கும்பல்.. படுகொலை செய்யப்பட்ட BSP தலைவர் Armstrong - பெரம்பூரில் சம்பவ இடத்தில் நடந்தது என்ன?

இதனையடுத்து அந்த கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் தலைநகர் சென்னையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். 

இதையும் படிங்க: Amstrong: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை; நண்பனின் இழப்பை தாங்காமல் கதறி துடித்த பா.ரஞ்சித்

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் சரணடைந்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.