திருச்சியில் பட்டப்பகலில் சீருடையில் இருந்த காவலருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மீன்வியாபாரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

திருச்சி அரியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வருகிறார் ஹரிஹரன் (40). இவர் நேற்று மாலை உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி இஸ்மாயில் மெடிக்கலில் போதை மாத்திரை கேட்டு தகறாறு செய்வதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. 

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஹரிஹரன் இஸ்மாயிலிடம் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆத்திரமடைந்த இஸ்மாயில் வீட்டில் இருந்த மீன் வெட்டும் அரிவாளை எடுத்து வந்து காவலர் ஹரிஹரனை தலை மற்றும் கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் காவலர் சரிந்தார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள், இஸ்மாயில் அங்கிருந்து தப்பிவிட்டார்.

இதனையடுத்து, படுகாயமடைந்த ஹரிஹரன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த உயரதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், இஸ்மாயிலை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.