நாமக்கல் மாவட்டம் ராமாபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி திருமங்கை இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் தான் ஆகின்றன. இந்த நிலையில் திருமங்கை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே அமராவதி ஆற்றின் கரையோரம் புதரில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

சுடிதார் அணிந்திருந்த நிலையில் திருமங்கை பிணமாக கிடந்தார். அவர் தனது கையில் எம்.எம். என்றும் மார்பு பகுதியில் ஆடம்ஸ் என்றும் பச்சை குத்தி உள்ளார்.

திருமங்கையை மர்ம நபர்கள் அமராவதி ஆற்றங்கரைக்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்து சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், வாயில் துப்பட்டாவை திணித்தும் கொன்று இருக்கலாம் என தெரிகிறது.

இது குறித்து மூலனூர் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது குறித்து திருமங்கையின் கணவர் ரமேசுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவரும், உறவினர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய  முதல் கட்ட விசாரணையில் திருமங்கை தனது சித்தி மற்றும் சித்தி மகளுடன் மோகனூரில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றதும், பின்னர் அவரது சித்தி மற்றும் சித்தி மகள் அவர்களது வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

திருமங்கை அவர்களை வழியனுப்பி விட்டு தானும் வீட்டிற்கு செல்வதாக கூறி இருக்கிறார். இந்த நிலையில் தான் அவர் மூலனூர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமங்கை மூலனூர் அமராவதி ஆற்றங்கரைக்கு வந்தது எப்படி? அவரை யாராவது கடத்தி வந்து பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமங்கையின் மார்பில் ஆடம்ஸ் என்று பச்சை குத்தியிருந்ததே!  அந்த ஆடம்ஸ் யார் ? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.