குமரியில் இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில், மணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு, கடியப்பட்டினத்தைச் சேர்ந்த வாலிபருடன் திருமணம் நிச்சயமாகி இருந்தது. மணமகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர்களது திருமணம் இன்று நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் தடபுடலாக செய்து வந்தனர்.

இந்நிலையில் மணப்பெண் திடீரென மாயமானார். அவர் புறப்பட்டு போகும்போது, திருமணத்திற்காக வைத்திருந்த 15 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இளம்பெண்ணை பல இடங்களில் தேடினர். எனினும் அவரை கண்டுபிடிக்க இயலாததால் இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு காதலன் இருப்பதும், அவருடன் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. இளம்பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, துாத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்துள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது. திருமணம் நிச்சயமான நிலையில் நகை, பணத்துடன் அந்த வாலிபருடன் இளம்பெண் புறப்பட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இந்தத்தகவல் மணமகன் வீட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.