வழக்கம்போல் பால் கறந்து விற்பனை நிலையத்திற்கு பைக்கில் கந்தசாமி எடுத்துச்சென்று கொண்டிருந்தார். அப்போது, குபேந்திரன் டூவீலரில் வந்து வழிமறித்து நிலப்பிரச்னையில் பஞ்சாயத்து பேசியது தொடர்பாக கந்தசாமியிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பென்னாகரம் அருகே செங்கல் சூளை அதிபரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த சின்னம்பள்ளி கோவிலிகோம்பை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (53). செங்கல் சூளை வைத்து நடத்தி வந்த இவர், மாடுகள் வைத்து பால் விற்பனையும் செய்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (30). லாரி டிரைவர். இவருக்கும் உறவினர்களுக்கும் இடையே இடம் பிரச்னை இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஊர் பிரமுகர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். செங்கல்சூளை அதிபரான கந்தசாமியும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். அவர் எதிர்தரப்பினருக்கு சாதகமாக பேசியதால் அவர் மீது குபேந்திரன் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல் பால் கறந்து விற்பனை நிலையத்திற்கு பைக்கில் கந்தசாமி எடுத்துச்சென்று கொண்டிருந்தார். அப்போது, குபேந்திரன் டூவீலரில் வந்து வழிமறித்து நிலப்பிரச்னையில் பஞ்சாயத்து பேசியது தொடர்பாக கந்தசாமியிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குபேந்திரன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் கந்தசாமியின் கழுத்தில் வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து குபேந்திரன் டூவீலரில் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பெரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த பொதுமக்கள் குற்றவாளியை கைது செய்யக்கோரி உடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர். தொடர்ந்து கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து குபேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- 61 வயசு தாத்தாவுக்கு இதெல்லாம் தேவையா.. லாட்ஜில் ரூம் போட்டு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த போது மரணம்.!
