கோவையை அடுத்த போத்தனூரை சேர்ந்தவர் விக்ரம் . இவர் கோவையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பவித்ரா .நிறைமாத கர்ப்பிணியான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக கடந்த 2-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நேற்று முன்தினம் அதிகாலை 2½ மணியளவில் சுகபிரசவத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அவருக்கு என்ன குழந்தை பிறந்தது என்று யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் குழந்தையையும் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் டாக்டர்கள் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து டாக்டர்களிடம் அவர்கள் கேட்டபோது, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு உள்ளது, சிகிச்சைக்கு பின்னர் சரியாகிவிடும் என்று கூறியதாக தெரிகிறது. 

இந்த நிலையில் நேற்று மதியம், அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் விக்ரமை அழைத்து உங்கள் குழந்தை இறந்துவிட்டது என்று தெரிவித்தனர். உடனே அவர் அந்த குழந்தையின் இறுதிசடங்கிற்கு ஏற்பாடு செய்தார். இறுதிசடங்கு செய்யும் இடம் வரை ஒரு நர்சு அந்த குழந்தையை எடுத்துச்சென்றார். அதன் தலையில் குல்லா மாட்டப்பட்டு இருந்தது. உடலில் துணி சுற்றி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இறுதி சடங்கு செய்யும் இடத்துக்கு சென்றதும், குழந்தையை அந்த நர்சு, விக்ரம் கையில் ஒப்படைத்தார். அப்போது அவர் குழந்தையின் தலையில் இருந்த குல்லா, உடலில் சுற்றப்பட்ட துணியை அகற்றி பார்த்தபோது, தலை மற்றும் நெஞ்சு பகுதியில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த விக்ரம் மற்றும் உறவினர்கள், இறந்த குழந்தை உடலுடன் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள், அங்கிருந்த டாக்டர்களிடம் குழந்தையின் உடலில் ரத்தக்காயங்கள் எப்படி வந்தது? பிறந்தபோது நீங்கள் கீழே போட்டு உள்ளர்கள், அதனால்தான் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் காயங்கள் இருக்கின்றன, எனவே குழந்தை எப்படி இறந்தது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து விக்ரம் மற்றும் அவருடைய உறவினர்கள் அந்த ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, குழந்தை இறந்ததில் சந்தேகம் இருப்பதால், பிரேத பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டது. பிறந்த குழந்தையை பிரேத பரிசோதனை செய்ய விருப்பம் இல்லாததால் விக்ரம் மறுப்பு தெரிவித்துள்ளார். பின்பு விக்ரம் மற்றும் அவருடைய உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

குழந்தை பிறந்தபோது அதை சரியாக பிடிக்காததால் தவறி கீழே விழுந்து உள்ளது. அதை மறைக்க தான் உடல்நலம் சரியில்லை, இன்குபேட்டரில் வைத்து உள்ளோம் என்று டாக்டர்கள் ஏமாற்றி உள்ளன என்று சோகத்துடன் தெரிவித்தனர்.