ரோட்டில் வழிமறித்து நின்ற பா.ஜ.க பிரமுகரை தட்டி கேட்ட கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. பம்மல் நாகல்கேணி பகுதியில் தனியார் கல்லூரியில் படிக்கும் நந்தா என்பவரும்  இவர் நண்பர் விக்னேஷ்  என்பவரும் நண்பர்கள். 

நேற்று முன்தினம் இரவு குரோம்பேட்டையில் நடந்த மாதா கோயில் திருவிழாவிற்கு, பைக்கில் சென்று இருந்தார்கள். போகும் வழியில் நாகல்கேணி பிரதான சாலையில் நித்தியானந்தம் என்பவர் வழியை மறித்துக் கொண்டு நின்றிருந்தார். அவரை நந்தாவும், விக்னேஷூம் தட்டிக்கேட்டதோடு, கையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டு விட்டு சென்றனர். பின்பு இருவரும் மீண்டும் அதே சாலை வழியாக வீட்டிற்கு திரும்பினர். 

அப்போது, இருவரையும் நித்தியானந்தமும், அவரது தந்தையும், பம்மல் நகர பாஜ தலைவருமான மதன் என்பவரும் தடுத்து நிறுத்தி இரும்பு கம்பி மற்றும் கத்தியால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நந்தாவிற்கு 9 தையல்கள் போடப்பட்டது. 

படுகாயமடைந்த விக்னேஷ் ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கர் நகர் போலீசார், நித்தியானந்தம் மற்றும் அவரது தந்தை மதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.