சேலத்தில் பாஜக பிரமுகர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஏற்காடு கீழ்கொளகூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (43), ஏற்காடு ஒன்றிய பாஜக துணைத்தலைவர். இவருக்கு, அத்தை வெள்ளையம்மாளின் மகன் ராமகிருஷ்ணனுடன் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக நேற்று முன்தினம், ஊர் பஞ்சாயத்து கூடி 1 ஏக்கர் நிலத்தை சின்னராஜிடம் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து கூறினர். இதனால், ஆத்திரம் கொண்ட ராமகிருஷ்ணனின் மகன் மணிவண்ணன், கத்தியால் சின்னராஜை சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் மணிவண்ணனை (25) கைது செய்தனர். 

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் தங்களது பராமரிப்பில் உள்ள நிலத்தை சின்னராஜ் உரிமம் கொண்டாடி பிரச்சனை செய்ததாகவும், அந்த நிலத்தை ஒப்படைக்கும்படி மிரட்டியதாகவும், ஊர் பஞ்சாயத்திடம் பேசி 1 ஏக்கர் நிலத்தை பெற அனுமதி பெற்றதால் கத்தியால் வெட்டிக்கொன்றதாகவும் வாக்குமூலத்தில் மணிவண்ணன் கூறியுள்ளார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.