சென்னை தண்டையார்பேட்டையில் காவல் நிலையம் அருகே பிரியாணி கடைக்காரர் ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சட்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி (43).  இவர் தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகே தள்ளுவண்டியில் பிரியாணி கடையை  கடந்த 20 வருடங்களாக நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் பிரியாணி செய்வதற்கான பொருட்கள் வாங்கிகொண்டு தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகில் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். 

அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ரவியை கொலை செய்ய ஓடிவந்தனர். இதை கண்ட ரவி அதிர்ச்சியடைந்து உயிர் பயத்தில் காவல் நிலையத்தை நோக்கி ஓடினார். ஆனால் விடாமல் துரத்தி சென்று கொடூரமாக சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இவருக்கும் அதே பகுதியை சேரந்த ரவுடி ரேடியோ விஜி என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. அதனாலயே ரவி வெட்டிக் கொள்ளப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.