திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கரு கலைப்பு செய்யவும் வற்புறுத்தியதாக அந்த பெண் தெரிவித்து இருக்கிறார்.
பலாத்கார வழக்கில் கைதாகி நீதிமன்றத்தில் பெயில் பெற்று, ஜெயிலில் இருந்து வரும் மாணவர் அமைப்பு தலைவனை வரவேற்கும் விதமாக "Bhaiya is back" வாசகங்கள் அடங்கிய போஸ்டர் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்ட சம்பவம் உச்சநீதிமன்ற நீதிபதியை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் மாணவர் அமைப்பு தலைவனுக்கு வழங்கப்பட்டு இருக்கும் பெயிலை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார். பெயலில் வெளியே வந்திருக்கும் நபர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கரு கலைப்பு செய்யவும் வற்புறுத்தியதாக அந்த பெண் தெரிவித்து இருக்கிறார்.
எச்சரிக்கை:
வழியில், "Bhaiya is back" எனும் பதாகை வைக்கப்பட்டு இருக்கிறது. எதை கொண்டாடுகிறீர்கள்? "Bhaiya is back" என்றால் என்ன? உங்கள் பையாவிடம் ஒரு வாரம் கவனமாக இருக்க கூறுங்கள்," என பெயில் பெற்ற நபரின் வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி காட்டமாக தெரிவித்தார்.

மேலும் எதற்காக பெயில் ரத்து செய்யப்படக் கூடாது என்ற காரணத்தை கூற நீதிமன்றம் சுபங் கோந்தியாவுக்கு உத்தரவிட்டு இருக்கிறது. இத்துடன் மத்திய பிரதேச அரசிடமும் இதுகுறித்த கருத்து தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மத்திய பிரதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சுபங் கோந்தியாவுக்கு பெயில் வழங்கி இருந்தது.
ஏ.பி.வி.பி. தலைவன்:
குற்றம்சாட்டப்பட்ட நபர் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தலைவர் சுபங் கோந்தியா ஆவார். பெயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து பெண் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் குறித்த தகவல் கொடுத்து இருக்கிறார். மேலும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் முக்கியத்துவம் மற்றும் வாதங்களுக்கு மதிப்பளிக்கவே இல்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் கூறி இருக்கிறார்.
ரகசிய திருமணம்:
முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் நெற்றியில் சுபங் கோந்தியா திலகம் இட்டு, கழுத்தில் தாலி கட்டினார். எனினும், இதனை பொது வெளியில் ஒப்புக் கொள்ள சுபங் கோந்தியா மறுத்து வந்தார் என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த பெண் கருவுற்று இருந்தார் என்றும் சுபங் கோந்தியா இவரை கட்டாயப்படுத்தி கரு கலைப்பில் ஈடுபட வைத்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.
இதை அடுத்து தான் பாதிக்கப்பட்ட பெண் ஜபால்பூர் மகளிர் காவல் நிலையத்தில் சுபங் கோந்தியா மீது புகார் அளித்து இருக்கிறார். வழக்கு பதிவு செய்ததும் கோந்தியா தலைமறைவாகி விட்டார் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் சுபங் கோந்தியா மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
