திருச்செங்கோடு அருகே மகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா அல்லது கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (35). திருச்செங்கோட்டில் உள்ள ஒரு பூக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வனிதா என்ற ஷோபனா (29). இவர் திருச்செங்கோட்டில் தனது கணவரின் சகோதரி நடத்தி வரும் அழகு நிலையத்தை நிர்வகித்து வந்தார். இவர்களுக்கு தேவா (11), சச்சின் (4) என்ற 2 மகன்கள் உள்ளனர். தேவா 6-ம் வகுப்பும், சச்சின் எல்.கே. ஜியும் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், வனிதா தனது மூத்த மகன் பிறந்தநாளுக்கு துணி எடுக்க நேற்று முன்தினம் ஈரோடு சென்றுள்ளார். பின்னர், கணவரை போனில் தொடர்பு கொண்ட வனிதா, இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் கடைசி பேருந்தை பிடிக்க முடியவில்லை. அதனால் தெரிந்தவர்கள் காரில் வருவதாக கூறியுள்ளார். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் பயந்து போன கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடையே, திருச்செங்கோட்டை அடுத்த புள்ளியம் பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு குட்டையில் பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தது ஷோபனா என்பது தெரியவந்தது. மேலும் அவரது உடல் கிடந்த இடத்தின் அருகே உள்ள மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில் ஷோபனா தனது மகனின் பிறந்த நாளிற்காக வாங்கிய துணிகள் மற்றும் சாக்லெட் பாக்கெட்டுகள் சிதறி கிடந்தது. பின்னர், அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலையாளி யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சோபனா இறப்பில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரின் செல்போனை கைப்பற்றி கடைசியாக யாருக்கு போன் செய்துள்ளார் என்று பார்த்துள்ளனர். அதில் கடைசியாக ஷோபனா கணேஷ்குமார் என்பவரை அழைத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவரது செல்போனில் கணேஷ்குமாரின் புகைப்படங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கணேஷ் குமார் யார் என்பதும் அவருக்கும் ஷோபனாக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.