ஸ்டார் ஹோட்டல் பாரில் தொடர்ந்து தகராறு நடப்பதால் அதை தடுக்கும் வகையில் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதை மீறினால் பார் உரிமம் ரத்து செய்ய  பரிந்துரை செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே பிரபல ஸ்டார் ஹோட்டல் ஒன்று உள்ளது.  நட்சத்திர  அந்தஸ்து உள்ள ஓட்டல் என்பதால் 24 மணி நேரமும் பார் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என எப்போதுமே ஹோட்டலில் பிரபலங்கள் கோட்டம் கூட்டமாகவே காணப்படுவார்கள். அதிலும் சினிமா நட்சத்திரங்கள் அதிகளவில் வந்து பாரில் தங்கள் நண்பர்களுடன் நடனமாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நட்சத்திர ஹோட்டலில் உள்ள பாரில் குடிபோதையில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கட்டிப்புரண்டு சண்டை போடும் காட்சி அரங்கேறியது. அதன்படி கடந்த 4 மாதங்களில் தேனாம்பேட்டை போலீசில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த தகராறு காரணமாக 10க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தண்டையார்பேட்டை சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்த சவுமியா என்பவர் தனது நண்பர்களுடன் பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார். கணவரை இழந்த அவர், தனியாக பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் சவுமியா மது போதையில் அரைகுறை ஆடையில் ஆபாச  நடனம் ஆடியதாக சொல்லப்படுகிறது. அப்போது  பாரில் மது அருந்திக் கொண்டிருந்த டார்லிங் - 2 படத்தின் இயக்குனர் சதீஷ் சந்திரசேகர், தனது நண்பர்கள் இருவரும், நடனமாடிய சவுமியா அருகில் சென்று அவரை, தங்களுடன் நடனமாடும்படி கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதற்கு சவுமியா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த திரைப்பட இயக்குனர் சதீஷ் சந்திரசேகர் சவுமியாவை கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால்  சிறிது நேரம் பாரில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்  போதை தெளிந்த  உடன் சவுமியா தன்னை தாக்கியதாக இயக்குனர் சதீஷ் சந்திரசேகர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார்  வழக்குப்பதிவு செய்து  நட்சத்திர ஹோட்டல் பாரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி வீடியோ காட்சிகளை வைத்து இயக்குனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நட்சத்திர ஹோட்டலில் உள்ள பாரில் இப்படி அடிக்கடி தகராறு நடப்பதால், நட்சத்திர ஹோட்டலில் இயங்கி வரும் பார் நள்ளிரவு 2 மணிக்கு மேல் இயங்க கூடாது என்று ஹோட்டல் நிர்வாகத்திற்கு போலீஸ் தரப்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.  கட்டுப்பாடுகளை மீறி  நள்ளிரவு 2 மணிக்கு மேல் பார் நடத்தினால் அதற்கான உரிமத்தையும் போலீசார் ரத்து செய்ய கலால் துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று நட்சத்திர ஹோட்டலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.