சமூக வலைதளங்கள் மூலம் மாணவிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் தினந்தோறும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதுதொடர்பாக கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே புகார் அளித்த மாணவியின் அண்ணனை மிரட்டியதாக பார் நாகராஜ், பாபு, செந்தில், ஆச்சிப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பார் நாகராஜ் அதிமுகவைச் சேர்ந்தவர். அவரை நேற்று அக்கட்சியில் இருந்து நீக்கி கழக ஒருங்கிணைப்பாளர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில், ஏராளமான இளம்பெண்களின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் இருந்தன. அதில் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

அந்த வீடியோவில், ஒரு இளம்பெண்ணை கும்பல் நிர்வாணப்படுத்துவதும், பெல்ட்டால் அடித்து துன்புறுத்துவதும் போன்ற காட்சிகள் இருந்தன. கும்பலிடம் சிக்கிய அந்த இளம்பெண் ‘அண்ணா என்னை விட்டுருங்கண்ணா, உன்னை நம்பி தானே வந்தேன், ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என கதறுகிறார். இதேபோல எண்ணற்ற பெண்களை கும்பல் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து சிபிசிஐடி தனது விசாரணையை இன்று தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பார்  நாகராஜ் ஒர பெண்ணை தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என துன்புறுத்தும் காட்சி அடங்கிய வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார் நாகராஜ் அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது இது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.