திருமணமான 6 மாதம் கழித்து அழகாக இல்லை எனக் கூறி மனைவியை கணவன் தலைக் கவசத்தால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு விஜயநகர் அருகே மாரேனஹள்ளியை சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. சசிக்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி 6 மாதம் வரை சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், திடீரென நீ அழகாக இல்லை, உன்னுடன் சேர்ந்துவாழ எனக்கு விருப்பம் இல்லை எனக் சசிக்குமார் கூறியுள்ளார்.

தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய போவதாக கூறி விஜயலட்சுமியிடம் விவாகரத்து கேட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி, திருமணமாகி 6 மாதம் ஆச்சு. இப்போ வந்து இப்படி சொல்றீங்க என விவாகரத்து தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு வந்துள்ளது. இதனை அடுத்து விஜயலட்சுமி கோபத்துக் கொண்டு அவரது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் சசிக்குமாரை சமாதானப்படுத்தி விஜயலட்சுமியை அவருடன் சேர்ந்து வாழ அனுப்பியுள்ளனர்.

ஆனாலும் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. விஜயலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி ஆசிட் வீசி விடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் சசிக்குமார் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும் படி கூறியுள்ளார். இதற்கு விஜயலட்சுமி மறுக்கவே, ஹெல்மெட்டால் அவரது தலையில் கொடூரமாக சசிக்குமார் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த விஜயலட்சுமி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் விஜயலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள சசிக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.