பிரியாணியில் காயத்திற்கு போடும் பாண்டேஜ் இருந்ததால், புகார் கூறிய இளைஞர்களை மிரட்டிய கடை நிர்வாகம் மிரட்டியிருக்கும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தலப்பாகட்டி பிரியாணி உணவகத்திற்கு சாப்பிட வந்த இளைஞர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட பிரியாணியில் காயத்திற்கு போடும் பாண்டேஜ் ஒன்று இருந்துள்ளது. இது பற்றி கடை நிர்வாகியிடம் புகார் கூறிய போது வந்தமா, சாப்பிட்டமா போய்கிட்டே இருக்கனும்... இல்லேன்னா நடக்கறதே வேற என்று சினிமா வில்லன் மாதிரி அடாவடியாக பேசினார்களாம் .

பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள், கடை நிர்வாகி அடாவடித்தனமாக பதில் கூறியதை பார்த்ததும் அனைவரும் கடை நிர்வாகிகளை கண்டித்து சத்தம் போட்டு சாப்பாட்டை பாதியிலேயே முடித்துக்கொண்டு கடையின் முன் கூட்டமாக  திரண்டனர்.

இந்த தகவல் அறிந்த கரூர் காவல் துறையினர் வந்ததும் அவர்களிடம் புகார் அளித்தனர். கூடவே உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதார ஆய்வாளரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து, அந்த தலப்பாக்கட்டி உணவகத்தில் சாப்பிடவந்த ஒரு வாடிக்கையாளர் தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து தகவல் போட்டுள்ளார். அதில், தலப்பாகட்டி உணவகத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வாடிக்கையாளர்கள் ஏதாவது புகாரோ அல்லது உணவில் குறைபாடோ கூறினால்,  புகார் கூறியவரை கடையில் வேலை பார்க்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு மிரட்டுவது. உன்னை யாரும் சாப்பிட கூப்பிடல. பிடிச்சா சாப்பிடு இல்லைன்னா போய்க்கிட்டே இரு. இப்படி மூன்றாம் தரமாக மிரட்டும் நிலை தொடர்ந்து நடக்கிறது. பொது மக்களும் நமக்கு எதுக்கு வம்பு என்று அமைதியாக சென்று விடுகிறார்கள்.

மேலும் தலப்பாகட்டி பிரியாணி கடையின் விளம்பரத்தால் கவரப்படும் பொதுமக்கள் இப்படி தொடர்ந்து அவமானப் படுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் தலப்பாகட்டி பிரியாணி கடைகள் இருக்கிறது. அதனால் வருமானமும் நிறைய வருகிறது. இதனால் கடையின் உரிமையாளரும் இப்படி பட்ட புகார்களை கண்டு கொள்வதில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம், எந்த ஒரு தொழிலுக்கும் வாடிக்கையாளர்கள் தான் முக்கியம், அதை ஆணவத்தால் மறந்தால்.. காலம் நிச்சயம் பாடத்தை கற்றுக்கொடுக்கும், அதற்கு தலப்பாகட்டி பிரியாணி கடை நிறுவனம் ஒன்றும் விதிவிலக்கல்ல, என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.