சோழவந்தானில் பிறந்து 5 நாளே ஆன பெண் சிசு மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் உடல் தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், சோழவந்தானைச் சேர்ந்த தம்பதியர் தவமணி, சித்ரா. கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் கள் குழந்தைகள் உள்ள நிலையில், சித்ரா மீண்டும் கர்ப்பிணியானார். கடந்த 10ம் தேதி சோழவந்தானிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. வீடு திரும்பிய அக்குழந்தை நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு மேல் திடீரென உயிரிழந்தாக தெரிகிறது. குழந்தையின் உடலை தவமணி குடும்பத்தினர் சோழவந்தானிலுள்ள காவல் துறை யினருக்கான பழைய குடியிருப்பு அருகே வைகை ஆற்றாங் கரையில் அடக்கம் செய்தனர். 

இந்நிலையில் தவமணி, சித்ரா தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருந்தபோதிலும், நான்காவதும் பெண் குழந்தை என்பதால் அவரை ‘சிசு’கொலை செய்திருக்கலாம் என, சிலருக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக சோழவந்தான் கிராம நிர்வாக அலுவலர் சமயன்  சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கிரேஸ் சோபியா பாய் வழக்கு பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக் குழு மூலம் குழந்தை யின் உடல் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சிசு கொலையா? அல்லது உடல் நிலை பாதிக்கப் பட்டு குழந்தை இறந்ததா? என்பது தெரியவரும். சிசு  கொலை  எனில் தம்பதியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸார் தெரிவித்தனர்.


மதுரை மாவட்டத்தில் பெண் சிசு கொலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு உசிலம்பட்டி செக்காணுரணி காடுவெட்டி ஆகிய பகுதிகளில் சிசு கொலை நடந்தேறியிருக்கிறது.எனவே மதுரை பக்கம் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் சம்பவம் பல ஆண்டுகள் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தலை தூக்கியிருக்கிறது.