சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயதான சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்தார். காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவி, தினந்தோறும் பேருந்தில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார். அந்த மாடியில் உள்ள தனது வீட்டுக்கும், பள்ளிக்கும் செல்லும்போது குடியிருப்பில் உள்ள லிப்டை பயன்படுத்துவார். ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்களோடு அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அனைவரிடமும் வெகுளித்தனமாக அந்த சிறுமி பேசுவாராம்.

இதை பயன்படுத்தி ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று கத்தியை காட்டி மிரட்டியதால் அந்த சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்ல பயந்து அமைதியாக இருந்து விட்டார். முதலில் 4 காம கொடூரன்களின் இச்சைக்கு பலியான அந்த சிறுமி, அடுத்தடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் காவலாளிகள், பிளம்பர்கள் என அங்கு வேலை பார்க்கும் நபர்களின் பிடியிலும் சிக்கியுள்ளார். சுமார் 7 மாத காலமாக இந்த கொடுமை அரங்கேறியுள்ளது.

இதனையடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர். இந்நிலையில், இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை கடந்தாண்டு ஜனவரி 11-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னரும், 17 பேருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்த வழக்கில் 17 பேருக்கு எதிரான வழக்கின் விசாரணையை இந்தாண்டு ஜனவரி மாதம் போக்சோ நீதிமன்றம் தொடங்கியது. இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக என்.ரமேஷ் நியமிக்கப்பட்டார். அதேபோல, குற்றம்சாட்டபட்ட 17 பேருக்கும் தனி தனியாக வழக்கறிஞர்களாக ஆஜராகி வாதிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசு தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டன. இரு தரப்பிலும் 43 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு 120 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தை அடுத்து சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதின்ற நீதிபதி மஞ்சுளா வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 1-ம் தேதி வழங்குவதாக அறிவித்திருந்தார். 

இதையொட்டி 16 பேரும் இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் விடுவிக்கப்பட்டார். மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. என்ன தண்டனை விவரம் என்பது குறித்து சிறிது நேரத்தில் தெரியவரும்.