கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்தவர் அஜித்குமார். வயது 29. இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த நிலையில் அன்னூரில் இருக்கும் ஒரு குளத்தில் இளம் வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் உடலை கைப்பற்றி விசாரணை செய்ததில், அது ஆட்டோ ஓட்டுநர் அஜித் குமார் என்பது தெரிய வந்தது. அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு அஜித் குமார் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். அஜித்குமாரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக அவர் கொல்லப்பட்டார்? முன்விரோதம் காரணமா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கோவையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர்  கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். தற்போது மீண்டும் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருப்பது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.