சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ்(32). இவரது மனைவி சபரி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தன்ராஜ் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மாமியார் வீடு அதே பகுதியில் இருக்கிறது. நேற்று முன்தினம் இரவு அங்கு தன்ராஜ் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் இருந்தார்.

வீட்டு வாசலில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் யாரும் எதிர்ப்பாராத விதமாக கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தன்ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை, உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவலர்கள் தன்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

கொலைவழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தன்ராஜ் மனைவியின் சகோதரர் மளிகை கடை நடத்தி வருவதும் அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், சுமன் ஆகியோர் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் காவல்துறையில் புகார் அளிக்கவே ஆத்திரத்தில் தன்ராஜை வெட்டி கொலைசெய்துள்ளனர். கொலையில் தொடர்புடைய அஜய்(19), திலக்ராஜ்(23), விக்கி(21), பால் பிரவீன்(26), சாமுவேல்(20) மற்றும் வினோத் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளான ராஜேஷ் மற்றும் சுமன் ஆகிய 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திடீர் உயர்வில் பெட்ரோல் விலை..! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!