வீட்டில் தனியாக இருந்த ராணுவ வீரரின் மனைவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த பழைய காதலன் தப்பி ஓடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

ஆந்திர மாநிலம், சித்தூர் போலீஸ் காலனியை சேர்ந்த ராணுவவீரர் சுரேஷின் மனைவி சீதாராணி என்பவர் கொடூரமாக கொல்லப்பட்டார். சீதாராணிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ராணுவவீரரான தனது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு கடந்த 4 வருஷமாக துர்கா காலனியில் உள்ள சொந்த வீட்டில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு விடும் ஹமீது ஆட்டோ டிரைவருடன் சீதாரணிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் ரகசிய காதலாக மாறியது. 

இதையறிந்த ராணுவ வீரரான கணவர் சுரேஷ் பலமுறை எச்சரித்தும் இவர்கள் கேட்பதாக இல்லை, இதனால் மனைவி சீதாராணியை முறைப்படி விவாகரத்து செய்துவிட்டார். இந்த நிலவரம் அறிந்த ஹமீதின் பெற்றோர், அவரை வேலைக்காக துபாய்க்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2 வருஷமாக துபாயில் வேலை செய்து வந்த ஹமீது கடந்தாண்டு ஊர் திரும்பி மீண்டும் சீதாராணியுடனான காதலை மீண்டும் புதுப்பிக்க முயன்றுள்ளார் ஆனால் அதற்கு சீதாராணி மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சாயங்காலம் சீதாராணியின் வீட்டிற்கு சென்ற ஹமீது, அவரை ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து சீதாராணி கத்தி கூச்சலிட்டதால் , ஆத்திரமடைந்த ஹமீது, சீதாராணியை அங்கிருந்த காய்கறிகள் வெட்டும் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது.

கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த சீதாராணியோ வலி தங்க முடியாமல் வீட்டில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடி வந்து அலறியபடியே சாலையில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சித்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

இதற்கிடையே தப்பிச்சென்ற அவரது காதலன் ஹமீது அப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் வாயில் நுரைதள்ளியபடி மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காதலியை குத்திக் கொலை செய்த விரக்தியில் விஷம் குடித்துவிட்டு அவரும் சிறிது நேரத்தில் பரிதாபமாக பலியானார். இரண்டு பேர் சடலங்களையும் மீட்டு சித்தூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.