மதுரை போக்குவரத்து போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் அட்டோ டிரைவரை போலீசார் திட்டியதால் அந்த வார்த்தைகளை தாங்க முடியாமல் மின்சார கம்பியை பிடித்து உடல் கருகி இறந்துபோன சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


 
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அரிச்சந்திரன். இவர் கடந்த 28-ம் தேதி மின்சாரக் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த  அக்கம்பக்கத்தினர்  அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். 90 சதவிகித தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனளிக்காமல்  இறந்துவிட்டார். இது தொடர்பாக, நீதிபதியிடம் மரண வாக்குமூலமும் கொடுத்துள்ளார்  அரிச்சந்திரன்.
காவல்துறையினரின் டார்ச்சரால்தான் அரிச்சந்திரன் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்பட்டது. இச் சம்பவம்  ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் சோகத்தையும் காவல்துறையினர் மீது வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதைக்கண்டித்து போஸ்டர் ஒட்டியவர்கள், `நியாயம் கிடைக்காமல் அரிச்சந்திரனின் உடலை வாங்க மாட்டோம்' என்று அவர் குடும்பத்தினரும் ஆட்டோ சங்கத்தினரும் அரசு மருத்துவமனை முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் தொடர்ச்சியான டார்ச்சரால் என் கணவர் தற்கொலை முடிவை எடுத்து தற்போது இறந்து போயிருக்கிறார். எனவே சம்மந்தப்பட்ட  காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரிச்சந்திரன் மனைவி சந்திரஜோதி  கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார்.அதில், `கடந்த 20 வருடங்களாக என் கணவர் ஆட்டோ ஓட்டி அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் குடும்பம் நடத்திவந்தோம்.காவல்துறையின் தொடர்ச்சியான டார்ச்சரால் என் கணவர் தற்கொலை முடிவை எடுத்துவிட்டார். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும்' என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

TBalamurukan