தெலுங்கு பிக் பாஸ் இரண்டாவது சீசன் மூலம் பிரபலமான நுதன் நாயுடுவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

தெலுங்கு பிக் பாஸ் இரண்டாவது சீசன் மூலம் பிரபலமானவர் நுதன் நாயுடு. ‘பரன்னஜீவி’ என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கியுள்ளார். ‘ஹெஸா’, ‘எஃப்2’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இச்சூழலில் ஆகஸ்ட் 28ஆம் தேதி நுதன் நாயுடுவின் வீட்டில் இருந்த கைபேசி ஒன்று தொலைந்து போனது. தங்கள் வீட்டில் பணிபுரிந்து வரும் தலித் இளைஞரான பாரி ஸ்ரீகாந்த் தான், அதை திருடியிருக்க வேண்டும் என்று முடிவு செய்த நுதன் நாயுடுவின் மனைவி வீட்டில் பணிபுரிந்து வரும் மற்ற பணியாளர்களோடு சேர்ந்து ஸ்ரீகாந்த்தை அடித்து துன்புறுத்தி அவருக்கு மொட்டை அடித்தார்.

தான் தாக்கப்பட்டது குறித்து ஸ்ரீகாந்த் விசாகப்பட்டினம் காவல் துறையினரிடம் புகாரளித்தார். இது தொடர்பாக மறுநாள் நுதனின் மனைவி ப்ரியா மாதுரி உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த தகவல் நுதன் நாயுடுவுக்கு தெரியவந்தது.தன் மனைவியை காப்பாற்றுவதற்காக, கைபேசியிலிருந்து ஆந்திரா மருத்துவ கல்லூரியின் முதல்வர், கிங் ஜார்க் மருத்துவமனை மேல் அலுவலர்களுக்கு அழைத்து, தான் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் ரமேஷ் என்று கூறி, தனக்கு வேண்டிய ஏழு பேருக்கு மருத்துவ சான்றிதழ் வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.சந்தேகமடைந்த அவர்கள், நேரடியாக ஐஏஎஸ் ரமேஷை தொடர்பு கொண்டு இந்த தகவலைக் கூறியுள்ளனர். 

உடனடியாக ரமேஷ் விசாகப்பட்டினம் காவல் ஆணையர் மனிஷ் குமார் சின்ஹாவை தொடர்பு கொண்டு தன் பெயரை பயன்படுத்தி யாரோ மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாக கூறியுள்ளார். விசாரணையில் நுதன் நாயுடு தான், ஐஏஎஸ் ரமேஷைப் போல ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. தன்னுடைய கைபேசியிலுள்ள சில செயலிகளிலும் தன் பெயரை ரமேஷ் என்று கொடுத்து வைத்திருந்ததையும் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனிடையே விசாகப்பட்டினத்திலிருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து மங்களூரு செல்ல முயன்ற நுதன் நாயுடுவை கர்நாடகா காவல் துறையினரின் உதவியுடன் விசாகப்பட்டினம் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து நான்கு கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்து வரும் வழியில் ஒரு கைபேசியை நுதன் தூக்கி வீச முயற்சி செய்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.