சென்னை அம்பத்தூரில் இருக்கும் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(60). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதலில் அவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இருக்கக்கூடும் என காவலர்கள் சந்தேகித்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் முதியவரை ஓட ஓட துரத்தி கல்லால் பலமுறை தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து காவலர்கள்  விசாரணையை துரித படுத்தினர். அதனடிப்படையில் முதியவர் அடிபட்டு கிடந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்த ரபிபில் இஸ்லாம்(30) என்கிற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முதியவரை கொலை செய்தது தெரியவந்தது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞர் வீட்டில் இருந்து சென்னைக்கு ஓடி வந்துள்ளார். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நண்பர்களுடன் பல தொழிற்சாலைகளில் வேலை தேடி அலைந்தும் வேலை கிடைக்காததால் சாலையோரத்தில் தங்கியிருக்கிறார். அப்போது அவருக்கும் மன நலம் பாதிப்படைந்த கிருஷ்ணமூர்த்தி முதியவருக்கும் தகராறு நிகழ்ந்திருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த ரபிபில் இஸ்லாம் கிருஷ்ணமூர்த்தியை ஓட ஓட விரட்டி கல்லால் அடித்ததில் தான் முதியவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அசாம் இளைஞரை நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.