சென்னையில் தனியார் கல்லூரி அருகே ரவு ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே நேற்று முன்தினம் ரவுடி குமரேசன் (32), பட்டப்பகலில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சியகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலையானவர் சூளைமேட்டை சேர்ந்த குமரேசன் (32) இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. பின்னர் செனாய் நகர் பகுதியை சேர்ந்த சகாயம் என்பவருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக இருந்து வந்த 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

பின்னர் சகாயம் அளித்த வாக்குமூலத்தில் ரவுடி தொழில் மூலம் நண்பரான குமரேசனும், சகாயமும் அண்ணாநகர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சகாயத்தின் நண்பர்களான பெரும்பாக்கத்தை சேர்ந்த ராஜி என்ற டாக்டர் ராஜி, வளசரவாக்கம் ராயலா நகரை சேர்ந்த யுவராஜ் ஆகியோரை யார் பெரிய ரவுடி என்ற போட்டியில் குமரேசன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் ரவுடி தொழிலை விட்டு திருந்தி வாழ்ந்து வந்துள்ளார். 

இதனால், குமரேசனின் கூட்டாளிகளுக்கு வருமானம் இல்லாததால், அவர்கள் சகாயத்தின் கூட்டாளிகளை தாக்கி கஞ்சா பறித்து வந்து விற்பனை செய்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த சகாயம், குமரேசனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். ஆனால், அதற்குள் போலீசார் கொலை வழக்கு தொடர்பாக குமரேசனை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். குமரேசன் விடுதலையாகி வெளியே வந்த போது பல முறை கொலை செய் முயற்சித்த போது நிறைவேறாமல் போனது. 

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு அண்ணாநகர் வழியாக ஆட்டோவில் வந்து கொண்டிருந்த குமரேசனை வழிமறித்து தனியார் கல்லூரி அருகே ஓட ஓட விரட்டி கொலை செய்தோம் என கூறியுள்ளார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவர்களை புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.