ராணுவ வீரர் கொலையில் அரசியல் நோக்கம் இல்லை - வதந்தி பரப்புபவர்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை
கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எந்தவித அரசியல் நோக்கமும் கிடையாது என்று விளக்கம் அளித்துள்ள மாவட்ட எஸ்.பி. இது தொடர்பாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர். பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. திமுகவைச் சேர்ந்த இவர், நாகோஜனஹல்லி பேரூராட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், அவரது தம்பி பிரபு இருவரும் ராணுவத்தில் பணியாற்றி வந்தனர்.
பிரபாகரனின் மனைவி பிரியா அவரது வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் துணி துவைத்துள்ளார். இதனை கவுன்சிலர் சின்னசாமி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் சின்னசாமி தனது உறவினர்களுடன் சென்று ராணுவ வீரர் பிரபாகரன் மற்றும் அவரது தம்பி இருவரையும் கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராணுவ வீரர் பிரபு பலத்த காயமடைந்து ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; 7 தமிழக மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு
ராணுவ வீரர் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் இந்த விவகாரம் தொடர்பாக இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “வேலம்பட்டி பிரச்சினை என்பது உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்சினை. இதனை அரசியலாக்க நினைத்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும், ராணுவ வீரர் மரணமடைந்த வேலம்பட்டியில் மோதிக்கொண்ட இரு தரப்பினரும் உறவினர்கள் தான். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். இதனை அரசியல் கண்ணோட்டத்தோடு சில கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன. இப்படி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.