திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே இருக்கிறது கிருஷ்ணாபுரம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி ரேணுகா. இந்த தம்பதியினருக்கு யோகிஸ்ரீ, தன்யாஸ்ரீ என இருமகள்கள் இருக்கின்றனர். நாகேந்திரன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் குடும்பத்துடன் குஜராத்தில் இருக்கும் ராணுவ குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். 

கடந்த 27 ம் தேதி அன்று தமிழ்நாட்டில் இருந்த ரேணுகாவின் தந்தை ஏழுமலைக்கு ராணுவ அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய அதிகாரிகள், ரேணுகா கேஸ் சிலிண்டர் வெடித்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் பதறிப்போன ரேணுகாவின் பெற்றோர், உடனடியாக குஜராத் கிளம்பிச்சென்றனர். அங்கு ரேணுகா மரணமடைந்திருக்கிறார். அதுகுறித்து விசாரித்தபோது அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் கூறப்பட்டிருக்கிறது.

இதையடுத்து ரேணுகாவின் உடலுடன் அவரது பெற்றோர் ஊருக்கு திரும்பினர். அவர்களுடன் வந்த ரேணுகாவின் மூத்த மகள் யோகிஸ்ரீ தனது தந்தை நாகேந்திரன் தான் தாயை தீ வைத்து எரித்துக்கொன்றதாக திடுக்கிடும் தகவலை கூறினார். இதைக்கேட்டு ரேணுகாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

தனது மகளை கொடூரமாக எரித்து கொலை செய்த மருமகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரேணுகாவின் தந்தை ஏழுமலை திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.