ஆற்காடு அருகே கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து நாடகமாடிய காதல் மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜா (வயது 25). இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமுகத்தை சேர்ந்த தீபிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ராஜா-தீபிகா தம்பதிக்கு பிரனீஷ் என்ற ஒரு வயது குழந்தை இருந்தது. 

இந்நிலையில் 13-ம் தேதி முதல் தனது கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் தீபிகா நேற்று புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்தனர். அப்போது ராஜாவின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடலாம் என்ற அடிப்படையில் போலீசார் கேட்டபோது, தன் கணவர் செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார் என்று தீபிகா கூறியுள்ளார். மேலும் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். 

இதனையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டனர். அப்போது தீபிகா, நான் எனது கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரனீஷ் ஆகியோரை கொன்று, வீட்டின் அருகே உள்ள நிலத்தில் புதைத்துவிட்டேன் என்று கூறி போலீசாரை அதிர வைத்தார். இதையடுத்து தீபிகாவை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தனர். அவர் கணவர் மற்றும் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். இதனையடுத்து உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் தீபிகா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், கணவர் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து சித்திரவதை செய்ததாகவும், இதனால் வேறு வழியின்றி கொலை செய்ததாகவும் தீபிகா வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது. கணவனை கொலை செய்த பிறகு குழந்தை என்று பார்க்காமல் கொடூரமாக கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். 

ஆனால் கள்ளத்தொடர்பு விவகாரத்தின் காரணமாகவே கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தீபிகாவிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக வேறுயாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.